சேலம் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட வடமாநிலப் பெண்கள் மீட்பு


சேலம் மாவட்டத்தில் நூல் மில் ஒன்றில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 35 வடமாநிலப் பெண் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ளது சர்வாய் கிராமம். இங்குள்ள அக்சென் டெக்ஸ் எனும் நூல் மில்லை ராமசாமி என்பவர் நடத்திவருகிறார். இந்த நூல் மில்லில் உள்ளூர் பணியாளர்கள் மட்டும் அல்லாது,ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர்.

இங்கு ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 35 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் கடந்த நான்கு மாதங்களாகப் பணிசெய்து வந்தனர். இந்நிலையில் தங்களுக்கு முறையான சம்பளம் வழங்காமல் கொத்தடிமைகளாக நடத்துவதாக பெண்கள் பாதுகாப்பு மைய உதவி எண்ணான 181-க்கு அழைத்து அப்பெண்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைவாசல் வட்டாட்சியர் வரதராஜன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ‘தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு தினசரி 400 ரூபாய் சம்பளம் எனவும், வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை எனவும் சொல்லி அழைத்துவந்தனர். ஆனால் அதன்படி செய்யவில்லை’ என அப்பெண்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த 35 வடமாநிலத் தொழிலாளர்களையும் மீட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக தலைவாசல் போலீஸார், மில்லின் உரிமையாளர் ராமசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x