பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பரபரப்பு: மூன்று பேருக்கு ஜாமீன்


பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அமித் திக்வேகர், கே.டி.நவீன் குமார், சுரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் 'லங்கேஷ் பத்ரிகே' என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் கௌரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தன.

இவர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான 'குஜராத் ஃபைல்ஸ்' நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். இந்த நிலையில் கடந்த 2017 செப்டம்பர் 5-ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பியபோது கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியான அமித் திக்வேகர் என்ற அமித் என்ற பிரதீப் மகாஜன், ஏழாவது குற்றவாளியான சுரேஷ் ஹெச்.எல், 17வது குற்றவாளியான நவீன் குமார் என்ற நவீன் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர். விசாரணையை முடிக்காமல் நீண்ட காலம் சிறையில் அடைக்க முடியாது என்று விஸ்வஜித் ஷெட்டி அடங்கிய ஒற்றை உறுப்பினர் பெஞ்ச் தீர்ப்பளித்தது .

இவ்வழக்கின் 11வது குற்றவாளியான மோகன் நாயக்கிற்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இதற்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கொலை, சதி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கும்போது ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, மோகன் நாயக்கின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச் நிராகரித்தது.

x