பழவந்தாங்கல் ரயில் நிலைய சர்வீஸ் சாலையில் சமூக விரோதச் செயல்கள் - பொதுமக்கள் புகார்!


சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலைய சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு மது, கஞ்சா உபயோகிப்பவர்கள், அதனை தட்டிக் கேட்பவர்களிடம் சண்டை போடுகின்றனர். இதுபோன்ற சமூக விரோதச் செயல்களை தடுக்க வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தனர்.

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையை அப்பகுதி மக்களும் பழவந்தாங்கல், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. முறையான பார் வசதி இல்லாததால் பழவந்தாங்கல் ரயில்நிலைய படிக்கட்டில் அமர்ந்தும், சர்வீஸ் சாலை ஓரமாக ரயில்வே சுற்றுச் சுவரின் கீழே அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் வேலைக்குச் செல்லும் பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் அந்தச் சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கஞ்சா புகைக்கின்றனர். இதனால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் இவர்களுக்குப் பயந்துகொண்டு சுமார் 1.5 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், சர்வீஸ் சாலையில் பூக்கடை மற்றும் பழக்கடைகளை வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல ஆட்டோ ஓட்டுநர்களும் வழியிலேயே ஆட்டோக்களை நிறுத்திவைத்து சர்வீஸ் சாலையை முழுவதுமாக அடைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அவ்வழியாக செல்வோர் யாராவது கேட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களிடம் சண்டை போடுவதாகவும், மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து குறித்து பழவந்தாங்கல் காவல் நிலையம் மற்றும் ஆலந்தூர் டாஸ்மாக் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர். இதையடுத்து அங்குள்ள இளைஞர்கள் அப்பகுதியில் வசிக்கும் அனைவரிடமும் இது தொடர்பாக கையெழுத்துப் பெற்று சென்னை மாவட்ட ஆட்சியருக்கு இன்று புகாராக அளித்துள்ளனர்.

சர்வீஸ் சாலையில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றி ஆட்டோக்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தி, சாலையில் மது அருந்துவோர் கஞ்சா புகைப்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

x