100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கேரளாவில் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சிபிசிஐடி போலீஸுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் தனக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு கொலை மிரட்டல் விடுவதாக பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், அவரது ஆதரவாளர்கள் உட்பட 13 பேர் மீது தனியாக மற்றும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் தான் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. இதனால் அவர் தலைமறைவானார்.
இதையடுத்து அவரை பல்வேறு இடங்களிலும் சிபிசிஐடி தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் அவர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீஸார் இன்று விஜயபாஸ்கரை கைது செய்துள்ளனர். அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ட்ரான்ஸிட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வர போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அழைத்து வரப்படும் விஜயபாஸ்கரிடம், இந்த வழக்குகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.