பள்ளிக்குச் சென்ற மாணவி மாயம்: சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் வீட்டில் சடலமாக மீட்பு


குண்டூர்: பள்ளிக்குச் சென்ற 7-ம் வகுப்பு மாணவி, கியாஸ் டெலிவரி செய்யும் ஊழியரின் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம், கொட்டரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் ஷைலஜா (13), இவர் அந்த ஊரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்குச் சென்ற அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் மதியம் பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு கிளம்பினார். ஆனால், மாலையாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர், உறவினர் ஷைலஜாவை பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில், கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் நாகராஜ் வீட்டு வாசலில் ஷைலஜாவின் செருப்பு கிடந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார், நாகராஜ் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஷைலஜா அவரது வீட்டிற்குள் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை குண்டூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சிறுமியை கொலை செய்த நாகராஜை கைது செய்வதுடன், பள்ளியை விட்டு மாணவியை தனியாக வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷைலஜாவின் பெற்றோர் வலியுறுத்தினர். சிறுமியை நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

ஏற்கெனவே திருமணமான நாகராஜ், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சூழலில் நாகராஜ் மீது சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து செப்ரோலு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x