அதிக சத்தம், அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள்: சென்னையில் பதிவான 354 வழக்குகள்!


சென்னையில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததாக 271 வழக்குகளும், அதிகச் சத்தத்துடன் ஒலி மற்றும் மாசு ஏற்படும் வகையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது 69 வழக்குகளும், அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசுக் கடைகள் நடத்தியதாக 14 வழக்குகள் என மொத்தம் தீபாவளி தொடர்பாக 354 வழக்குகள் சென்னை போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் ஏராளமாக வெடிக்கப்படுவதால் அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசின் விதிகளை மீறி பட்டாசுக் கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்த குற்றத்திற்காக 69 வழக்குகளும் என மொத்தம் 354 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளன.

x