எல்லைப் பிரச்சினையில் திருநெல்வேலி மாவட்டத்தில் முள் முருங்கை மரங்களை வெட்டிய விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்(60) விவசாயி. அதேபகுதியைச் சேர்ந்தவர் முருகன்(36) இவர்கள் இருவருக்கும் சொந்தமான தோட்டங்கள் காரித் தோட்டம் என்னும் பகுதியில் அடுத்தடுத்து உள்ளது. இதில் தோட்டங்களுக்கான எல்லைத் தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை முருகன் தன் தோட்டத்தில் இருந்த எவ்வித பலனும் தராத முள் முருங்கை மரங்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திற்கு வந்த நடராஜன், எல்லையை நிர்ணயம் செய்த பின்பு மரங்களை வெட்டிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதை முருகன் ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தன் கையில் இருந்த மண் வெட்டியால் நடராஜனின் தலையில் பலமாக ஒரு அடிபோட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே நடராஜன் உயிர் இழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீஸார் முருகனைக் கைது செய்தனர்.