கண்ணாடி பாட்டிலில் ராக்கெட்: கண்டித்தவரைக் கத்தியால் குத்திக் கொன்ற சிறார்கள்!


கண்ணாடி பாட்டிலில் ராக்கெட் வைத்து வெடித்துக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டித்தவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் உள்ள பரேக் வளாகம் அருகே ஒரு மைதானத்தில் 12 வயது சிறுவன் நேற்று வெடி வெடித்துக்கொண்டிருந்தார். கண்ணாடி பாட்டிலில் வைத்து ராக்கெட் போன்ற வெடிபொருட்களை அச்சிறுவன் வெடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு சென்ற சுனில் நாயுடு(21) எனும் இளைஞர், அந்தச் சிறுவனைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த அச்சிறுவனின் அண்ணன் (15 வயது), சிறுவனின் நண்பர் (14 வயது) ஆகியோரும் சுனில் நாயுடுவிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதல் முற்றிய நிலையில், மூவரும் சேர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, சிறுவனின் அண்ணன் சுனில் நாயுடுவைக் கத்தியால் பல முறை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர், அருகில் உள்ள ராஜ்வாடி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒரு சிறுவனைத் தேடி வருகிறார்கள்.

ஆபத்தான முறையில் வெடி வெடித்ததைக் கண்டித்த இளைஞர், சிறுவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

x