மாடு முட்டியதில் கீழே விழுந்த உதவி ஆய்வாளர்: பேருந்து மோதியதில் உயிரிழந்த சோகம்


கடலூர்: மாடு முட்டியதில் கீழே விழுந்த உதவி ஆய்வாளர் மீது பேருந்து ஏறி இறங்கியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையில் சுற்றிக்கொண்டிருந்த மாடு திடீரென பாரதிதாசன் சென்ற இருசக்கர வானத்தின் மீது பாய்ந்து, பாரதிதாசனை முட்டித்தள்ளியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாரதிதாசன் மீது அவ்வழியாக வந்த அரசுப்பேருந்து ஒன்று ஏறி, இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார், பாரதிதாசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் சாலைகளில் விடப்படுவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். கால்நடைகளை சாலைகளில் மேய விடக்கூடாது என பலமுறை எச்சரித்தும், கால்நடைகளின் உரிமையாளர்கள் இந்த எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதே போல், சென்னையில் மாடுகள் முட்டி பலர் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

x