கள்ளக்குறிச்சி விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!


புதுச்சேரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தனர். இவர்களில் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து வீட்டிற்கு திரும்பினர். 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோனது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இங்கு 8 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கண்ணன் (72) என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் மோகன் (50) என்பவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x