பெட்ரோல் பங்க் ஊழியரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி: போலீஸ்காரர் கைது


கண்ணூர்: பெட்ரோல் பங்க் ஊழியர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம், கண்ணூர் மாவட்டம் தாளப்பில் பாரத் பெட்ரேல் பங்க் உள்ளது. இதில் அனில் என்பவர் வேலை செய்கிறார். இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த போது, கண்ணூர் டவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த கே.சந்தோஷ் குமார் என்ற போலீஸ்காரர் காருடன் வந்துள்ளார். அவர் எரிபொருள் நிரப்பி விட்டு காரை வேகமாக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த அனில், காரை பின் தொடர்ந்து சென்று பணம் கேட்டுள்ளார். பின்னர் காரை நிறுத்தி எரிபொருளுக்குப் பாதி பணத்தை சந்தோஷ் குமார் தந்துள்ளார்.

ஆனால், முழு பணத்தையும் தருமாறு காரை மறித்து அனில் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் காரால் அனில் மீது மோதியுள்ளார். இதனால் அனில் காரின் பேனட்டில் விழுந்துள்ளார். அப்படியே அரை கிலோ மீட்டர் தூரம் அனிலை காரில் இழுத்துச் சென்றார். இதில் கீழே விழுந்து காயமடைந்த அனிலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளுடன் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அனில் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். இதன் அடிப்படையில் பெட்ரோல் பங்க் ஊழியரைக் கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் சந்தோஷ் குமார் இன்று கைது செய்யப்பட்டார்.

காவலர் சந்தோஷ் குமார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து நகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரள போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x