மதுரையில் மாணவன் கடத்தல் சம்பவம்: மூளையாக செயல்பட்ட கடத்தல்காரர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்


மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது கணவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவர்களது 14 வயது மகன், தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படிக்கிறார்.

கடந்த 11-ம் தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றபோது, கும்பல் ஒன்று ஆம்னி வேனில் ஆட்டோ ஓட்டுநருடன் மாணவனை கடத்தியது. ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் பேசிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், ராஜலட்சுமியிடம் ரூ.2 கோடி பணத்துடன் குறிப்பிட்ட இடத்துக்கு வரவேண்டும் என, மிரட்டினார்.

இது தொடர்பாக தகவல் தெரிந்த எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் காசி தலைமையில் போலீஸார், கடத்தல் கும்பலின் செல்போன் டவர் மூலம் மாணவர் இருக்குமிடத்தை நெருங்கியதால் வேறு வழியின்றி மாணவர், ஆட்டோ ஓட்டுநரை செக்கானூரணி அருகே கிண்ணிமங்கல பகுதியில் இறக்கிவிட்டு தப்பினர். பிறகு இருவரும் மீட்கப்பட்டனர்.

தனிப்படையினரின் தீவிர தேடுதலில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த காவல் துறையில் இருந்து பணி நீக்கமான காவலர் தேனி செந்தில்குமார் (45) அவரது கூட்டாளிகள் தென்காசி வீரமணி (30) காளிராஜ் (36), நெல்லை அப்துல் காதர் (38) ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவி சூர்யா, அவரது நண்பரும், பல்வேறு வழக்கில் சிக்கியருவமான தூத்துக்குடி மகாராஜன் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரிந்து அவர்களை தேடுகின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘சூர்யாவின் கணவர் குஜராத்தில் பணிபுரிகிறார். இரு குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி பிரிந்துள்ளனர். மதுரையில் பெற்றோருடன் இருந்த போது, சூர்யாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோருக்கு எதிராகவே சூர்யா 6 மாதத்துக்கு முன் எஸ்.எஸ். காலனியில் புகார் கொடுத்தவர்.

சென்னையில், வசிக்கும்போது சூர்யாவுக்கு மகாராஜனுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சூர்யாவின் நாத்தனார் ஒருவரும், மைதிலி ராஜலட்சுமியும் ஆரப்பளையம் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் படித்த போது தோழிகள். இதன் மூலம் சூர்யா, மைதிலியுடன் பழகியுள்ளார். இவர்களுக்குள் உள்ள சொத்து பிரச்சினை காரணமாகவே ராஜலட்சுமியின் மகன் கடத்தப்பட்டு இருக்கிறார். சூர்யாவின் தூண்டுதலில் மகாராஜன் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிகிறது. இருவரையும் நெருங்கிவிட்டோம். பிடித்து விடுவோம்’ என்றனர்.

x