ஆடு காணாமல் போனது தொடர்பாகத் தகராறு: கோவையில் விவசாயி சுட்டுக்கொலை


கொலை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆடு காணாமல்போனது தொடர்பான மோதலில் விவசாயி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், கண்டியூர் ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. சொந்தமாக ஆடுகளை வளர்க்கும் இவர் கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்டி வந்தார். நேற்று தன் நண்பர்களான அய்யாசாமி, ரஞ்சித் உள்ளிட்டோருடன் சேர்ந்து சின்னசாமி மது அருந்தினார்.

அப்போது சின்னசாமியின் ஆடுகள் காணாமல் போனது தொடர்பாக அவருக்கும் அவரது நண்பர் ரஞ்சித்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ரஞ்சித் வேட்டைக்குப் பயன்படுத்தும் நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சின்னசாமியை நோக்கி சுட்டார். இதில் 11 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரமடை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, சின்னசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரஞ்சித்தைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

x