சென்னையில் இன்று அதிகாலை தன் ஆறுமாதக் கைக்குழந்தையுடன் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தன் ஆறுமாதக் கைக்குழந்தையுடன் இன்று அதிகாலை அண்ணா ஆர்ச் அருகே கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று மின்னல் வேகத்தில் அதிவேகமாக வந்தது. வந்த வேகத்தில் பூங்குழலி மீது மோதியது. இதில் பூங்குழலியும், அவரது மடியில் இருந்த ஆறுமாதக் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவத்தைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டனர். டூவீலரில் வந்தவரையும், அவரது பின்னால் இருந்த பெண்ணையும் பிடித்துவைத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் நேரில் வந்து விசாரித்தபோது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால் அவரையும், அவரது பைக்கின் பின்னால் அமர்ந்துவந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பூங்குழலி, மற்றும் அவரது குழந்தையின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதிவாசிகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.