விருதுநகர்: விருதுநகர், ஆர்.ஆர். நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 100 பவுனுக்கு அதிகமான தங்க நகைகள் இன்று திருடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் தனியார் சிமெண்ட் ஆலையில் துணைப் பொது மேலாளராக (தொழில்நுட்பம்) பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன். குடும்பத்துடன் 2 நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றார். இன்று (ஜுலை 14) காலை ராமச்சந்திரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அருகில் வசிப்போர் ராமச்சந்திரனுக்கும், வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதேபோன்று, அதே வளாகத்தில் வசித்து வரும் ஆலையில் துணைப் பொதுமேலாளராக (நிர்வாகம்) பணியாற்றும் பாமுருகன் என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்தன. பாலமுருகனும் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பெங்களூர் சென்றது தெரியவந்தது. அதையடுத்து, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது குறித்து ராமச்சந்திரனுக்கும் பாலமுருகனுக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
பிற்பகலில் வீடு திரும்பிய ராமச்சந்திரன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் சுமார் 90 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. மேலும், பாலமுருகன் வீட்டில் எவ்வளவு திருடுபோனது என்பது தெரியவில்லை. அவர் ஊர் திரும்பிய பின்னரே, திருடு போன நகைகள் எவ்வளவு என்பது தெரியவரும்.
இந்நிலையில், இரு வீடுகளிலும் பதிவான கைரேகைகளை போலீஸார் பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சிமெண்ட் ஆலை வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்திலும் திருட்டு முயற்சி நடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.