ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், புல் வெட்டுவதற்காக வயல்வெளிக்குச் சென்ற 50 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 4 ம் தேதி மாலையில் 50 வயது பெண் ஒருவர் சோள வயலில் புல் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு போலீஸ்காரர்களும் மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் அப்பெண்ணை பலமாக தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் பலத்த காயங்களுடன் இருந்த அப்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அதிக இரத்தப்போக்கு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்க்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய அப்பகுதி மகளிர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் நவிதா மஹ்தோ, “ பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் எங்களிடம் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணின் மருத்துவப் பரிசோதனையிலும் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ண காந்த் திவாரி மற்றும் அஜய் பாரா என அடையாளம் காணப்பட்ட இரண்டு போலீசார் நேற்று கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்