அப்பாவி இந்தியக் குடும்பத்தைக் கொன்ற அமெரிக்கர்: இரண்டாவதாகச் செய்த கொடும் குற்றம்!


ஜீசஸ் மனுவேல் சல்காடோ

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கடத்தி கொடூரமாகக் கொன்ற நபர், ஏற்கெனவே இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர் எனும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கலிபோர்னியா மாநிலத்தில் வசித்துவந்த ஜஸ்தீப் சிங் (36), அவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27), அவர்களது 8 மாதக் குழந்தை ஆரூஹி தேரி, ஜஸ்தீப்பின் அண்ணன் அமன்தீப் சிங் (39) ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதி, துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெர்செட் நகரில் மெர்செட் நகரில் ட்ரக் வணிகத்தில் ஈடுட்டுவந்தார். அவரது அலுவலகத்திலிருந்துதான் நால்வரும் ஜீசஸ் மனுவேல் சல்காடோ என்பவரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும், பழத்தோட்டம் ஒன்றில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். நால்வரும் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தனர். அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. எனினும், பணம் கேட்டு மிரட்டியே அவர்களை சல்காடோ கடத்தியதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ஜீசஸ் மனுவல் சல்காடோ, 17 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றவர் எனத் தெரியவந்திருக்கிறது.

48 வயதாகும் சல்காடோ, 2005-ல் இதே போல் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை மிரட்டியிருக்கிறார். அந்த வீட்டில் வசித்துவந்த நபர், அவரது மனைவி, 16 வயது பெண், அப்பெண்ணின் தோழி என 4 பேரையும் கயிற்றால் கட்டிவைத்த அவர், அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்தார்.

அத்துடன், அங்கிருந்த நீச்சல் குளத்தில் இரு சிறுமிகளையும் தள்ளிவிட்ட சல்காடோ, அந்தக் குடும்பத் தலைவரையும் நீச்சல் குளத்தில் தள்ள முயன்றிருக்கிறார். மேலும், ‘இதைப் பற்றி போலீஸிடம் தெரிவித்தால் உங்களைக் கொன்றுவிடுவேன்’ என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

எனினும், அந்தக் குடும்பத்தினர் போலீஸில் புகார் தெரிவித்தனர். மறுநாள் காலையில் சல்காடோ கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 8 ஆண்டுகள் சிறையில் கழித்த நன்னடத்தை சோதனை நிலையின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டார். இந்தத் தகவல்களை சிபிஎஸ்47 எனும் ஊடகத்துக்கு அந்தக் குடும்பத் தலைவர் அளித்திருக்கிறார். அவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நன்னடத்தையைக் காரணமாக முன்வைத்து விடுவிக்கப்பட்ட சல்காடோ, பிஞ்சு குழந்தை உட்பட நால்வரைக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறார். போலீஸார் அவரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். “இந்தக் கொடூரக் குற்றவாளிக்கு நரகத்தில் ஒரு பிரத்யேக இடம் காத்திருக்கிறது” என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

x