மகளிடம் அத்துமீறிய இரண்டாவது கணவன்: பிரிந்து சென்ற மனைவியை மிரட்டுவதற்காக நடந்த பயங்கரம்


மகளிடம் இரண்டாவது கணவர் தவறாக நடந்து கொண்ட காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்றார். மனைவியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்த காரணத்தால், மாமனார் மாமியாரை அந்த பெண்ணின் இரண்டாவது கணவர் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, குரோம்பேட்டை அடுத்துள்ள உள்ள ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் . இவரது மூத்த மகள் வசந்தி கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்திக்கும் , அண்ணாநகரைச் சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். போதைக்கு அடிமையான மோசஸ் வசந்தியுடன் அடிக்கடி தகராற்றில் ஈடுபட்டு வந்ததால், அவரை பிரிந்த வசந்தி மீண்டும் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து வசந்தியை சமாதானப் படுத்திய மோசஸ், குரோம்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அவருடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் வசந்தியின் மகளிடம் மோசஸ் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து வசந்தியை போனில் சமாதானம் செய்ய மோசஸ் முயன்றுள்ளார். அதற்கு வசந்தி உடன்படாத காரணத்தால், உன்னுடைய அப்பா, அம்மாவைக் கொலை செய்துவிடுவேன் என அவரை மிரட்டியுள்ளார். மேலும் வசந்தியின் பெற்றோரிடம் சமாதானமாகப் பேசி குரோம்பேட்டை வீட்டிற்கு அழைத்து வந்து, வசந்தியின் அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா ஆறுமுகத்திடம் வசந்தி எங்கு இருக்கிறார் எனக் கேட்டு மிரட்டியிருக்கிறார். அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது எனச் சொன்னதால், இருவரையும் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார் மோசஸ். மேலும் அந்த வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

வசந்தி தன்னுடைய பெற்றோரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலிருந்ததால், சந்தேகத்தின் பேரில் குரோம்பேட்டை வீட்டை வந்து பார்த்துள்ளனர். அப்போது பூட்டியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சிட்லபாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து பூட்டை உடைத்துப் பார்த்தனர். அப்போது, வசந்தியின் பெற்றோர் சடலமாக அழுகிய நிலையில் கிடந்துள்ளனர். காவல் துறையினர் அந்த உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மோசஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

x