மேற்கு வங்கம்: லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்


பாசிம் மேதினிப்பூர்: மேற்கு வங்க மாநிலம், பாசிம் மேதினிப்பூர் மாவட்டத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், பாஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு, ஆம்புலன்ஸ், லாரி மீது மோதிய விபத்து நடந்தது. கேஷ்பூர் வழியாக செல்லும் பஞ்சமி மாநில நெடுஞ்சாலை அருகே இந்த விபத்து நடந்தது. கிர்பாயில் உள்ள மருத்துவமனையில் இருந்து மேதினிப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபர்ணா பாக் என்ற நோயாளியை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றது.

நோயாளியின் குடும்பத்தினர், ஓட்டுநர் உள்பட 8 பேர் ஆம்புலன்ஸில் பயணித்தனர். அப்போது, சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி மீது ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியது. இதில், நோயாளியின் குடும்பத்தினர் 4 பேர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நோயாளி மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அபர்ணா பாக்கின் தாய் அனிமா மல்லிக், அவரது கணவர் ஷ்யாமபாதா பாக், மாமா ஷியாமல் புனியா, அத்தை சந்தனா புனியா என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் இருவரின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அபர்ணா பாக்கிற்கும், ஷியாமபாதா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அபர்ணா பாக் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

x