எண்ணூர் துறைமுகத்தில் லாரி மீது கண்டெய்னர் விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு: சக ஓட்டுநர்கள் போராட்டம்


திருவள்ளூர்: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தில் கண்டெய்னர் பெட்டி தவறி விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானி முனையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலி கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் அடுக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குருவிமேடு பகுதியில் உள்ள இசிசிடி தொழிற்சாலைக்கு மற்றொரு முனையத்திலிருந்து கன்டெய்னர் பெட்டிகள் கொண்டு வருவதற்காக இன்று லாரிகள் எண்ணூர் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தன.

இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பர்த்தல் நாகராஜன் (40) என்பவர் லாரி ஒன்றை ஓட்டிக்கொண்டு அதானி முனையத்திற்கு வந்திருந்தார். அப்போது காலி கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவு காரணமாக மற்றொரு முனையத்தின் மீது கண்டெய்னர் பெட்டி இடித்ததில், ஒரு கண்டெய்னர் பெட்டி சரிந்து விழுந்தது. கீழே இருந்த லாரியின் மீது அந்த கண்டெய்னர் விழுந்ததில், ஓட்டுநர் நாகராஜன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற மீஞ்சூர் காவல் நிலைய போலீஸார் நாகராஜனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அதானி முனையத்தில் கிரேன் ஆபரேட்டர்களாக முறையாக பயிற்சி பெறாத வட மாநிலத்தவரை பணியில் ஈடுபடுத்தி இருப்பதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர். மேலும், உயிரிழந்த லாரி ஓட்டுநரின் மரணத்திற்கு நீதி கேட்டு அவர்கள் எண்ணூர் துறைமுகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

x