ஆபாச வீடியோவைக் காட்டி மாணவிகளுக்குத் தொல்லை: ஆசிரியருக்கு நூதன தண்டனை கொடுத்த கிராமவாசிகள்


ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் வகுப்பறைக்குள் மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி அவர்களை தகாத முறையில் தொட்டதாகக் கூறி கோபமடைந்த கிராமவாசிகள், பள்ளி ஆசிரியரின் முகத்தில் மையை ஊற்றி, காலணிகளால் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நோமுண்டி தொகுதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஆறு மாணவிகள், ஆசிரியர் தங்களுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டியதாகவும், தகாத முறையில் தொட்டதாகவும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கிராம மக்கள் புதன்கிழமையன்று எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கிராம மக்கள் கூட்டம் நடத்தி தாங்களே அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி ஏராளமான பெண்கள் அந்த ஆசிரியரைப் பிடித்து அவரது முகத்தில் கருப்பு மையை தடவி, காலணிகளால் மாலை அணிவித்தனர். அதே கோலத்தில் அவரை படாஜம்டா பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது, ​​போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டனர்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபரை சிறைக்கு அடைக்கக் கோரி போராட்டக்காரர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். பல மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

x