பாஜகவினரே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பாதுகாப்புத் தேடுகின்றனர் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநிலத் தலைவர் ஷேக் அன்சாரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “எங்களுக்கு அவகாசம் தாருங்கள். எவ்வாறு எதிர்கொள்ள முடியுமோ, அவ்வாறு எதிர்கொள்கிறோம் என மிரட்டல் தொனியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகிறார். அவரது ஜனநாயக விரோதப் பேச்சை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டிக்கிறது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இயக்க வரலாற்றில் நாங்கள் அசம்பாவிதங்கள் ஈடுபட்ட வரலாறு இல்லை.
பாஜகவினர் தங்கள் வீட்டில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசி குட்டு வெளிப்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்திருக்கிறது. பாஜக நிர்வாகி தன் கையை தானே வெட்டிவிட்டு தீவிரவாதிகள் வெட்டியதாக நாடகம் ஆடிய காட்சிகளும் அம்பலப்பட்டுள்ளது. இப்போதும் பாஜகவினரே தங்கள் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். மாநில அரசுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக மாயத்தோற்றத்தை உருவாக்க பாஜக சதி செய்கிறது. பாஜகவின் அழுத்தத்திற்கு உள்ளாகி இஸ்லாமியரைக் கைது செய்வதை காவல்துறையினர் நிறுத்த வேண்டும். அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் வகையில் இஸ்லாமியர்களை நோக்கி விசாரணையை திருப்பிவிடக் கூடாது.”என்றார்.