நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன்: ஷாக்கான போலீஸார்!


பாளையங்கோட்டை மத்திய சிறையின் வார்டன், தூத்துக்குடியில் நடுரோட்டில் நின்று கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகில் 7 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றனர். போலீஸைக் கண்டதும் அவர்கள் ஓடினர். அதில் மூவர் மட்டுமே சிக்கினர். அவர்களிடம் போலீஸார் சோதனை செய்தபோது அவர்களிடம் 3 கிலோ 300 கிராம் அளவில் கஞ்சா இருந்தது.

திரேஸ்புரத்தை சேர்ந்த சுதர்சன், சந்தோஷ், அய்யாத்துரை ஆகிய மூவரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் தப்பியோடியதில் திரேஸ்புரத்தை சேர்ந்த அஜித்குமார்(35) என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அஜித்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். இவரையும், இவரோடு தப்பிச்சென்ற மேலும் மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறைவார்டனாக இருக்கும் அஜித்குமார் சாலையில் நின்று கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சம்பவம் போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

x