பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்டு ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் 22ம் தேதி என்ஐஏ சோதனை நடத்தியது, தமிழகத்திலும் சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் 11 பேர் உட்பட நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக கோவையில் பதற்றம் நிலவுவதால் மாநில கமாண்டோ பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் என மொத்தம் 3500 போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயல்கள் குறித்து தற்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இது குறித்து விசாரிக்க சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.