பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதா, உத்தர பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
உத்தர பிரதேச மாநில சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா இந்த சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சபையில் பேசுகையில், “போக்சோ சட்டம் மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலமாக
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்புகள் குறையும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையும் மற்ற சாட்சிகளையும் மிரட்டுவது அல்லது துன்புறுத்துவதைத் தடுக்கவும் இந்த மசோதா உதவும்” என்று கூறினார்.
உத்தரபிரதேச பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு திருத்த மசோதாவும் இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக கலவரத்தில் கொல்லப்பட்ட எவருக்கும் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உரிமைகோரல் தீர்ப்பாயத்திற்கு இந்தத் திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்த இழப்பீட்டுத் தொகை குற்றவாளியிடமிருந்து மீட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கைக்கான செலவையும் குற்றவாளிகளே ஏற்க வேண்டும் என்றும் இந்த சட்டத் திருத்த மசோதா தெரிவிக்கிறது.
நேற்று அவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு மசோதாக்களும், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியான ஆர்எல்டியும் அவையில் இல்லாத நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டன.