காஞ்சிபுரம் அருகே அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு: நகைகள் கொள்ளை


காஞ்சிபுரம்: ஸ்ரீ மொழுதியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

வாலாஜாபாத் அருகே உள்ள கீழ்பேரமநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மொழுதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பொதுமக்கள் காது குத்துதல், திருமணங்கள் மற்றும் பல்வேறு திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 1.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிக் கொலுசு, உண்டியலில் இருந்த நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் மாகரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்டியல் உடைக்கப்பட்டதால் சிதறிக் கிடக்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள். இந்த தகவலின் அடிப்படையில் மாகரல் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதித்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x