பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தான் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால், அப்பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விகாஸ் ராஜன் எனும் 27 வயது இளைஞர், உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு, சென்னையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் பெங்களூருவுக்குச் சென்ற அவர் அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். மேலும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்குப் பயிற்சியும் அளித்துவந்தார்.
இந்தச் சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமூகவலைதளம் மூலம் பிரதீபா எனும் இளம்பெண்ணின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. கட்டிட வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த பிரதீபாவும், விகாஸ் ராஜனும் ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினர். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தயாராகினர்.
இந்நிலையில், விகாஸ் ராஜன் செப்டம்பர் 10-ம் தேதி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதீபாதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
கோமா நிலைக்குச் சென்ற விகாஸ் ராஜன், மூன்று நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தத் தொடங்கினர். அப்போதுதான் அதிர்ச்சிகரமான அந்தத் தகவல் தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன்னர் பிரதீபா இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாணப் படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விகாஸ் ராஜனிடம் விசாரித்திருக்கிறார். அப்போது இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றைத் தொடங்கி அந்தப் படங்களை வேடிக்கையாகப் பதிவிட்டதாக விகாஸ் ராஜன் கூறியிருக்கிறார். திருமணம் செய்துகொள்ளவிருந்த காதலரே இப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொண்டாரே என அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பிரதீபா, அவரைப் பழிவாங்க முடிவுசெய்தார்.
தன் நண்பர்களை அழைத்து விவரம் சொல்லி திட்டம் தீட்டினார். அதன்படி விகாஸ் ராஜனை அழைத்த அவர்கள் மது அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தரையைச் சுத்தம் செய்யும் துடைப்பானால் பிரதீபாவும் அவரது நண்பர்களும் விகாஸ் ராஜனைத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை பிரதீபாவே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதற்கிடையே விகாஸ் ராஜனின் சகோதரரை அழைத்த பிரதீபா, ஒரு சண்டையில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், போலீஸார் நடத்திய விசாரணையில், நடந்த உண்மை வெளிப்பட்டது.
இதையடுத்து, பிரதீபா, அவரது நண்பர்கள் கவுதம், சுஷீல், சுனில் ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
வெளிநாட்டில் படித்த மருத்துவர் ஒருவர், தான் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் நிர்வாணப் படத்தைப் பொதுவெளியில் வெளியிட்டதால், அப்பெண்ணாலேயே அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.