வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் பலி: கோயிலில் புனித நீராடும் போது சோகம்


கல்புர்கி: கோயில் அருகே புனித நீராட ஆற்றில் இறங்கிய இளம்பெண்ணை வெள்ளம் அடித்துச் சென்றது. அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள டவுண்ட் தாலுகா வந்ததாவி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைலி கோடே(23). இவர் தனது குடும்பத்துடன் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம், அஃபசல்பூர் தாலுகா கங்காபூரில் உள்ள ஸ்ரீ தத்தாத்ரேயா கோயிலுக்கு வழிபட இன்று வந்திருந்தார். அப்போது பீமா நதியில் புனித நீராடுவதற்காக ஷைலி கோடே சென்றார்.

அவர் நதியில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த போது வெள்ளம் அடித்துச் சென்றது. இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் நீரில் குதித்து ஷைலியைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், வெள்ளத்தின் வேகத்தில் ஷைலி அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த ஷைலி கோடே உடலை மீட்டனர். இதுகுறித்து தேவலகாபூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஷைலி உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமைனைக்கு அனுப்பி வைத்தனர். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில், வெள்ளத்தில் இளம்பெண் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x