மதுரை: மதுரையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறி, 106 பேரிடம் போலி டிக்கெட்டுகள் வழங்கி மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிரபல விமான நிறுவனத்தின் பெயரில் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சுற்றுலா திட்டத்தில் இணைந்தவர்கள் பயண நாளான இன்று மதுரை விமான நிலையத்துக்கு, உடைமைகளுடன் வந்தனர். அப்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டை அவர்கள் காண்பித்து உள் நுழைய முயன்றபோது, அவை போலி டிக்கெட்டுகள் என்பது தெரியவந்தது. இதனை அறிந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்தம் 106 பேரிடம் இதுபோன்று போலி விமான டிக்கெட் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் இவர்களுக்கு அயோத்தி சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம், அது தொடர்புடைய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி டிக்கெட் வழங்கி, பயணிகள் ஏமாற்றப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.