ஜாமீனில் வந்து வழக்கறிஞரை வெட்டிய இளைஞர்: அதிர்ச்சியூட்டும் பின்னணித் தகவல்கள்!


திருப்பூரில் பெண் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் மகளைக் காதலிப்பதாகத் தொல்லை கொடுத்தவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். நாளை நடைபெறும் வழக்குகளுக்கான கோப்புகளைத் தயார் செய்வதற்காகத் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில், ஜமீலா பானு தன் மகளுடன் இன்று அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்ய முயன்றவர்களைப் பற்றிய தகவல்களை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “ஜமீலா பானுவின் மகள் நிஷாவைக் காதலிப்பதாக ரகுமான்கான் என்பவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து ஜமீலா பானு கொடுத்த புகாரின் அடிப்படையில் ரகுமான்கான் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையிலிருந்து வெளிவந்த ரகுமான்கான் அலுவலகத்திலிருந்த ஜமீலா பானு மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார்” என்று தெரிவித்தனர்,

x