மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டுப் பிரசுரம்: ஈரோட்டில் கைது செய்யப்பட்ட இளம் பெண்கள்!


மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை இரண்டு பெண்கள் கொடுப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களிடம் இருந்த துண்டுப் பிரசுரங்களைப் பறித்தனர். அதில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகள் கொண்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து அவர்களை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மகளிர் போலீஸார் அவர்களைக் காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றிக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த இளம் பெண்கள் நந்தினி (29), நிரஞ்சனா(24) என்பது தெரியவந்தது. பின்னர் சிறிது நேரத்திலேயே இரண்டு பேரையும் காவல் துறையினர் ஜாமீனில் விடுவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி பகுதியிலும் இதே போன்று இவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது மது எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய நந்தினி, அதன் பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களை நடத்தி கைதாகிவருவது குறிப்பிடத்தக்கது.

x