வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி கார் திருட்டு: வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்!


திருடப்பட்ட வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டி பயணம் செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து வாகனங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்யைில் திருடப்பட்ட ஸ்விஃப்ட் ரக கார் ஒன்று மதுரவாயல் சுங்கச் சாவடியைக் கடந்து செல்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பெருங்களத்தூர் அருகே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கருடன் வந்த காரை மறித்து காவல் துறையினர் சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் காரைத் திருடி வந்தது தெரியவந்தது. போக்குவரத்து காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கார் கடத்தலில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இரண்டு கார்கள், பைக், 62 சவரன் நகை உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

x