விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கடற்கரை அருகே சென்றபோது சுமார் ஒன்றரை வயது பெண் குழந்தையின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக மரக்காணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கூனிமேடு குப்பம் கிராமத்திற்கு அருகே உள்ள அனுமந்தை குப்பம் கடற்கரையோரம், 4 வயது சிறுமி ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அந்த குழந்தையின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த குழந்தைகள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவேல்-கௌசல்யா தம்பதிகளின் குழந்தைகளான ஒன்றரை வயது சுஷ்மிதா மற்றும் 4 வயது ஜோவிதா என்பது தெரியவந்தது. கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகவும், இன்று காலை முதல் ஆனந்தவேல் மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் குழந்தைகளை கடலில் வீசி விட்டு, ஆனந்தவேலும் கடலில் குதித்திருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, மாயமான ஆனந்தவேலையும் தேடி வருகின்றனர்.