ஆம்னி பேருந்து மீது, வேகமாக வந்த டிப்பர் லாரி உரசிச் சென்ற சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர், சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஆம்னி பேருந்து மூலமாகச் சேலத்திலிருந்து நேற்று இரவு சென்னைக்குப் புறப்பட்டனர்.
நள்ளிரவு 12.45 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளைய பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக அந்த ஆம்னி பேருந்து நின்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் செல்வதற்காகக் காத்திருந்த திருநாவுக்கரசு(65) உள்பட அவரது உறவினர்கள் பேருந்தின் வலது பக்கமாக நின்றுகொண்டு உடைமைகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களைப் பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள லக்கேஜ் கேரியரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரி பேருந்தின் வலது பக்கத்தில் மின்னல் வேகத்தில் பயங்கரமாக மோதிவிட்டு, உரசியபடி சென்றது.
இந்த விபத்தில் திருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி மற்றும் பஸ் கிளீனர் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மீது மோதிய லாரியின் சக்கரத்தில் கிளீனரின் உடல் சிக்கி, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதியே ரத்தக்கறையாக காட்சி அளித்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயா, பிரகாஷ், மாதேஸ்வரி ஆகிய 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சுப நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.