டிராக்டர் ஏற்றி விவசாயியின் கர்ப்பிணி மகள் கொலை: நிதி நிறுவன ஊழியர்கள் அடாவடி


ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் மஹிந்திரா நிதி நிறுவனத்தின் மீட்பு முகவரால், டிராக்டர் ஏற்றி கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஹசாரிபாக் மாவட்டத்தில் இச்சாக் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடனை காட்டாததால் டிராக்டரை மீட்க மாற்றுத்திறனாளி விவசாயியின் வீட்டிற்கு நிதி நிறுவன ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது ​​மஹிந்திரா நிதி நிறுவன அதிகாரிக்கும், விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விவசாயியின் மூன்று மாத கர்ப்பிணி பெண் டிராக்டருக்கு முன்பு வந்தார். நிதி நிறுவன முகவர் அந்தப் பெண்ணின் மீது டிராக்டரை ஏற்றியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டிராக்டரை மீட்டெடுப்பதற்காக விவசாயியின் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு நிதி நிறுவன அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மீட்பு முகவர், தனியார் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா, “ எங்கள் நிறுவனம் இது தொடர்பாக விசாரணை நடத்தும். காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்போம்.

ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்துள்ளோம். ஒரு மனித சோகம் நிகழ்ந்துள்ளது. தற்போதுள்ள மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் ஆய்வு செய்வோம்" என்று தெரிவித்தார்.

x