டிடிஎப் வாசனின் காரை திரும்ப ஒப்படைக்க மறுப்பு - மதுரை நீதிமன்றம் உத்தரவு!


பிரபல யூட்யூபரான டிடிஎப் வாசன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விபத்து ஒன்றில் சிக்கியதை அடுத்து அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டதன் மூலம் பிரபலமானார். அதன் காரணமாகவே வழக்குகளிலும் சிக்கினார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதை நிறுத்திவிட்டு, கார் ஓட்டுவதில் அவர் இறங்கினார். அதிலும் பல்வேறு விதிமீறல்களை அவர் செய்து வந்ததால் அவர் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு காரில் சென்ற அவர், செல்போன் பேசியபடி கார் ஓட்டி, வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் டிடிஎப் வாசனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிடிஎப் வாசனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் அவரிடமே திரும்ப வழங்க வேண்டும் எனக் கோரி, அவரது தாய் சுஜாதா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் வாகனத்தை பயன்படுத்தினால், அதே போன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது” எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

x