போதையில் போலீஸ் எஸ்பியின் செல்போனைப் பறித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் - ஓட்டுநர் மீது தாக்குதல்!


மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குடிபோதையில் காவல்துறை அதிகாரி ஒருவரின் மொபைல் போனைப் பறித்துச் சென்றதுடன், போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநரையும் தாக்கியுள்ளனர்.

குவாலியரில் நகர காவல் கண்காணிப்பாளர் (சிஎஸ்பி) ரிஷிகேஷ் மீனா, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் கஜரராஜா மருத்துவக் கல்லூரி அருகே போதையில் இருந்த இளைஞர்களைப் பிடித்து, ஏன் இந்த நேரத்தில் வெளியே சுற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். உடனே வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிஎஸ்பியை சுற்றி வளைத்த மாணவர்கள், அவரது மொபைல் போனையும், வாகன சாவியையும் பறித்தனர். அதன் பிறகு, இந்த மாணவர்கள் கல்லூரிக்குள் அமைந்துள்ள ரவிசங்கர் விடுதிக்குள் சென்றனர்.

சிஎஸ்பி தனது ஓட்டுநருடன் விடுதிக்கு சென்றபோது, ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள் எஸ்.பியின் மொபைலையும், போலீஸ் வாகனத்தின் சாவியையும் சாக்கடையில் வீசினர். வாக்குவாதம் செய்தவாறு அவர்கள் வாகனத்தின் டயர்களில் உள்ள காற்றையும் பிடுங்கிவிட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிஎஸ்பி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து, அவர்கள் கல்லூரியின் டீன் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நான்கு மாணவர்களை கைது செய்த போலீஸார், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்களை விடுவித்தனர். 6 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்லூரி வளாகத்தில் இருந்து போலீஸ் வாகனத்தின் சாவி மற்றும் மொபைல் போன் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

x