3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளியின் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு


மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரத்தில் மூன்று வயது சிறுமி ஒரு தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த போலீஸார், அவரின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்தனர்.

செவ்வாய்கிழமை மாலை பன்மோர் நகரில் சிறுமி வீட்டுக்கு வெளியில் அமர்ந்திருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியை அருகில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அழுகைச் சத்தம் கேட்டதும், அவரின் தாய், அந்த இடத்திற்கு ஓடிச் சென்றார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுவதையும் கண்டார். அவரும் குற்றவாளியை பிடிக்க துரத்திச் சென்றார், ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளூர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார், அதைத் தொடர்ந்து கிரிராஜ் ரஜாக் எனும் 35 வயதான குற்றவாளி கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் கல் குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த காலத்திலும் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில் உள்ளூர் அதிகாரிகள் நேற்று குற்றவாளியின் வீட்டை இடித்துத் தள்ளினர். ராஜாக்கின் வீடு இடிப்பு நடவடிக்கை குறித்து பேசிய பன்மோர் நகராட்சி அதிகாரி யஸ்வர் கோயல், "குற்றம் சாட்டப்பட்டவரின் குடியிருப்பு அமைந்துள்ள முழு காலனியும் சட்டவிரோதமானது. எனவே, அவரது வீடு இடிக்கப்பட்டது" என்றார்.

செப்டம்பர் 8 ம் தேதி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மூன்றரை வயது நர்சரிப் பள்ளி மாணவியை அவரது பள்ளி பேருந்து ஓட்டுநர் வாகனத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பஸ் டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை கைது செய்த போலீஸார், குற்றம் சாட்டப்பட்ட டிரைவரின் வீட்டை இடித்துத் தள்ளினார்கள்.

x