புதுச்சேரியில் மின்சாரம் தாக்கி ரேஷன் கடை ஊழியர் உயிரிழப்பு: மின்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


புதுச்சேரி: புதுச்சேரியில், வயலைப் பார்க்கச் சென்ற ரேஷன் கடை ஊழியர் மீது பழுதான மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே குடியிருப்புபாளையம் செட்டித் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (52). ரேஷன் கடை ஊழியரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் இருந்த பரசுராமன் குடியிருப்புபாளையத்தில் ஒருவரின் வயல்வெளியை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கம் போல் அவர் வயல்வெளியை பார்வையிடச் சென்றார். அப்போது அவ்வழியாக இன்சுலேட்டர் உடைந்து தாழ்வாகச் சென்ற மின் கம்பி பரசுராமன் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது.

பிறகு அப்பகுதி மக்களே டிரான்ஸ்பார்மரில் இணைப்பை துண்டித்து பரசுராமனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். தகவலறிந்த பாகூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால், மின்துறையின் அலட்சியப்போக்கால் ஆத்திரமடைந்த பொது மக்கள், உடலை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். ஏற்கெனவே இப்பகுதியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மின் கம்பிகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், வலுவிழந்த நிலையில் உள்ள மின் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது.

இதில் மனிதர்கள் உயிரிழப்பதுடன் கால்நடைகளும் பலியாகின்றன. மின் துறையின் அலட்சியத்தால் தான் மீண்டும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டது எனக்கூறி அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் பரசுராமனின் உடலை எடுத்துச் சென்று பாகூர் – வில்லியனுார் சாலை குடியிருப்புபாளையம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து, மின் துறையின் அலட்சிய போக்கை கண்டித்தும், ஆதரவற்ற நிலையில் உள்ள அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிடகோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் போலீஸார் பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் காரணமாக பாகூர் - வில்லியனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x