குடும்பத்தகராறில் விஷம் கலந்த மதுவை குடித்த வாலிபர்: மீதமிருந்த மதுவை அருந்திய நண்பர் பலியான சோகம்


மயிலாடுதுறை: விஷமருந்திய மதுபானத்தை குடித்த வாலிபர் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளாவிடத்தைச் சேர்ந்த ஜோதிபாசு (32) என்பவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சகிலா கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ஜோதிபாசு, நேற்று மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள நல்லாத்தூர் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். பின்னர் மதுபான பாட்டில் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டின் அருகே உள்ள பகுதியில் பூச்சி மருந்தை பாதி மதுவில் கலந்து குடித்துவிட்டு மீதியை அருகில் வைத்துள்ளார். அப்போது அவரது நண்பரான ஜெரால்ட் (24) என்பவர் அங்கு வந்துள்ளார். மதுபானத்தை கண்ட அவர் பூச்சி மருந்து கலந்திருப்பதை அறியாமல் அதனை அருந்தியுள்ளார். விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்ததாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே போதையில் இருந்த ஜெரால்ட் அதனை கேட்காமல் இந்த மதுவையும் அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விஷம் கலந்ததை இருவரும் வெளியில் சொல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற ஜோதிபாசு தான் விஷம் அருந்திய மதுவை குடித்து விட்டதாக கூறியதை அடுத்து, உடனடியாக ஜோதிபாசு மற்றும் ஜெரால்ட் ஆகிய இருவரையும் உறவினர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெரால்ட் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், ஜெரால்டின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஜெரால்டின் உடலை பெறுவதற்காக அலங்கரிக்கப்பட்ட இறுதி ஊர்வல வாகனத்தை எடுத்து வந்த உறவினர்கள், திடீரென தரங்கம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோதிபாசு, முன்விரோதம் காரணமாக ஜெரால்டை கொலை செய்யும் நோக்கோடு இந்த செயலில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

x