பண்ருட்டி அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பண்ருட்டி மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் சக்திவேலுவின் உறவினர்கள் சக்திவேலை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று காலை பண்ருட்டியில் சாலைமறியல் போராட்டம் செய்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்திய போலீஸார் அவர்கள கலைந்து போக செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பண்ருட்டி போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கு பெண் தொடர்பு காரணமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் சக்திவேலுடன் தொடர்பில் இருந்ததாகவும், அது அவரது நண்பரும், வேறொரு சமூகத்தை சேர்ந்தவருமான சுமன் என்பவருக்கு பிடிக்காமல் போய் இருவருக்கும் கருத்து வேறு வேற்றுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது அருந்தி இருக்கின்றனர். அப்போது இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து தான் வைத்திருந்த அரிவாளால் சக்திவேலை சுமன் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலையில் சுமனுக்கு யார் உடனடியாக இருந்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவரும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.