ராஜபாளையம்: கொள்ளையடித்த பணத்தில் ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கிய முகமூடி கும்பல் தலைவன்!


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி அணிந்து வீடுகளில் புகுந்து நகை, பணத்தை திருடி, அதன் மூலம் ராஜபாளையத்தில் ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கிய முகமூடி கும்பல் தலைவன் மூர்த்தியை கோவையில் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்த நபர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் 18ம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரை பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(23), சுரேஷ்குமார்(26) இருவரை சோதனை செய்த போது, அவர்களிடம் முகமூடி இருந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் கணவன், மனைவியை கட்டி போட்டு நகைகளை திருடிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த திருட்டு சம்பவத்திற்கு பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி (33) என்பவர் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

ராஜபாளையம் போலீஸார் தேனி சென்று மூர்த்தியின் அம்மா சீனித்தாய் (53), மனைவி அனிதா (29), உறவினர் நாகஜோதி (25), லட்சுமி, மகாலட்சுமி மோகன் ஆகிய 6 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். விசாரணையில் மூர்த்தி தலைமையில் தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புகள் 150 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் பணம், 3 லேப்டாப், 3 டேப்லெட், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், திருடிய பொருட்கள் மூலம் வாங்கிய ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி மூர்த்தியை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று கோவையில் வைத்து கொள்ளை கும்பல் தலைவன் மூர்த்தியை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி தனியாகவும், குழுவாகும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருடி வந்துள்ளார். திருடிய பணம் மூலம் ராஜபாளையத்தில் ரூ.4 கோடியில் நூற்பாலை வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. விசாரணைக்கு பின் திருடிய பணத்தைக் கொண்டு வேறு எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்பது தெரியவரும்" என்றனர்.

x