தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரவில் இயற்கை உபாதை கழிப்பதாக சொல்லிவிட்டுச் சென்ற பிரபல ரவுடி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகில் உள்ள மேலக்கடையநல்லூர் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் கொல்லிமாடசாமி. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதில் கொல்லி மாடசாமி தன் நண்பர்களுடன் சேர்ந்து, செல்லத்துரையைக் கொலை செய்தார். கொல்லி மாடசாமி மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொல்லி மாடசாமி குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருந்தார். அதில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென எழுந்து இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாக சொல்லிச் சென்றார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அவர் வெளியில் இருக்கும் மரத்திற்கு அருகில் பிணமாகக் கிடந்தார். கொல்லி மாடசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து கடையநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.