திருவள்ளூர் அருகே தண்டலச்சேரியில் டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டுக் கொள்ளையடித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த கையோடு போதையில் மயங்கிய நிலையில் இருந்தவர்கள் போலீஸில் சிக்கியுள்ளனர்.
கும்பிடிப்பூண்டி அருகில் உள்ள தண்டலச்சேரியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் ஊழியர்கள் நேற்று இரவு பத்து மணிக்கு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு போலீஸார் சாதாரணமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது டாஸ்மாக் கடையில் துளை போடப்பட்டு இருந்தது. கடைக்குள் பேச்சுச் சத்தமும் கேட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அதிரடியாக டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தனர். அங்கே இரு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தைச் சேர்ந்த முனியன் எனத் தெரியவந்தது. இருவரும் டாஸ்மாக் கடை கல்லாவில் இருந்த 14 ஆயிரம் ரொக்கப்பணத்தை எடுத்துவிட்டு, சாராயப் பாட்டிலை பார்த்ததும் குடிக்கத் தொடங்கினர். ஆனால் குடி போதையில் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே முகாமிட்டு விட்டனர்.போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.