மது போதையில் விடிய விடிய சீட்டு விளையாட்டு: அதன் பிறகு நடந்த விபரீதம்!


கொலை

ஈரோட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காகச் சென்றிருந்த குமரி மாவட்டத் தொழிலாளர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் இன்று அதிகாலை 2 மணியளவில் குமரி மாவட்டத்தில் இருந்து வேலைக்குச் சென்றிந்த தொழிலாளி ஒருவர் கடப்பாறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக கம்பி கட்டும் பணியும் நடக்கிறது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கவுண்டம்பாளையம் பழனியப்பா நகர் பகுதியில் ஷெட் அமைத்து தங்கியிருந்து பணி செய்து வருகின்றனர்.

இவர்கள் தினமும் வேலை முடிந்ததும் மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு குமரி மாவட்டம், ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்த சுஷின்(40), ராஜாவூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இருவரும் குடித்துவிட்டு விடிய, விடிய சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் திடீர் தகராறு நடந்தது. இதில் ரமேஷ் அருகில் இருந்த கடப்பாறையால் சுஷினைத் தாக்கினார். இதில் சுஷின் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை நடந்ததும் ரமேஷ் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

சாலைப்பணிக்காக சென்ற இடத்தில் குமரி தொழிலாளர்கள் குடித்துவிட்டு சீட்டு விளையாடி கொலையில் முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x