காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்த சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டுள்ளார்
காரைக்காலில் 8ம் வகுப்பு படிக்கும் தனது மகளைவிட நன்றாக படிக்கும் மாணவனுக்கு, அந்த மாணவியின் தாய் விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவனுக்கு விஷம் கொடுத்த மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் நேரு நகரில் சர்வைட் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் நேரு நகர் ஹவுஸிங் போர்டு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற பாலமணிகண்டனுக்கு மாலையில் வீடு திரும்பியதும் வயிற்று வலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாலமணிகண்டனிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது தன் கூட படிக்கும் மாணவி ஒருவரின் தாய், பள்ளி பாதுகாவலரிடம் தன்னுடைய தாய் தந்ததாக சொல்லி குளிர்பான பாட்டில் கொடுத்ததாகவும், அதை பாதுகாவலர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை அருந்திய பிறகே மயக்கம், வாந்தி உள்ளிட்டவை வந்ததாகவும் மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
அவர்கள் இந்த விஷயத்தை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்ல அது வேகமாக பரவி காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகன் நன்றாக படிப்பவர். வகுப்பில் முதல் மார்க் எடுப்பவர். அதனால் கூட படிக்கும் மாணவி எப்போதும் இந்த மாணவரிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார். அந்த மாணவிக்கு இவர் மீது கோபம் இருந்திருக்கிறது. அதனால் தான் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டினர். பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது மாணவியின் தாய் சகாயமேரி வாட்ச்மேனிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இது குறித்து காரைக்கால் காவல் நிலையம், காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநில கல்வித்துறை அமைச்சர், புதுவை தலைமைச் செயலாளர், துணைநிலை ஆளுநர் ஆகியோர்களுக்கு பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இப்போது அந்த மாணவியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.