கோவில்பட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுனர் தன் டூவீலரில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தது. இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஓட்டுநர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கோவில்பட்டி சுபாநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோவில்பட்டி பணிமனையில் அரசுப்பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவர் சுபாநகரில் இருந்து நேற்று முன் தினம் கோவில்பட்டி நோக்கி தன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றின் அருகில் சென்று கொண்டிருக்கும்போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு சீனிவாசன் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாய் குறுக்கே பாய்ந்து, சீனிவாசன் கீழே விழும் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றிவருகின்றன. அதனால் அதிக விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.