தனிப்பட்ட பகையின் காரணமாக வெளிநாட்டில் இருந்தவாறே திமுக வழக்கறிஞர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர் சொந்த ஊர் வந்திருப்பதை அறிந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், பேய்குளம் அருகில் உள்ளது பிரண்டார்குளம். இங்குள்ள மரிய அலெக்ஸ் என்பவரது மகன் ஞானராஜ்(30) வெளிநாடில் வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்தவாறே போலி முகநூல் கணக்குகள் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் கிஸ்ஸிங்கர் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகளைப் பரப்பினார். இதுகுறித்து கிஸ்ஸிங்கர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். போலீஸார் மூலம் சைபர் க்ரைம் பிரிவும் இதுகுறித்து விசாரித்தனர்
அப்போது அந்த போலி முகநூல் கணக்கு வெளிநாட்டு ஐபி முகவரியில் இயக்கப்படுவது தெரிந்தது. ஞானராஜ்க்கும், வழக்கறிஞர் கிஸ்ஸிங்கருக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்துவந்தது. இதனாலேயே ஞானராஜ் இவ்வாறு பதிவிடுவது தெரியவந்தது. ஆனாலும் ஞானராஜ் வெளிநாட்டில் இருப்பதால் இவ்வழக்கை கிடப்பில் போட்டனர். இந்நிலையில்தான் ஞானராஜ் சொந்த ஊர் வந்திருந்தார். இதையறிந்த காவல்துறையினர் நேற்று இரவு ஞானராஜைக் கைது செய்தனர். ஞானராஜ் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். அரசியலைத் தாண்டி, தனிப்பட்ட பகையினால் அவர் இப்படி பதிவுகளைப் போட்டிருப்பது தெரியவந்தது. ஞானராஜ் மீது கொலை மிரட்டல், ஆபாசப் பேச்சு, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.