போக்சோவில் கைதான மடாதிபதிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் - உடல்நலக்குறைவு என மருத்துவமனையில் அனுமதி!


பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள கர்நாடகாவிலுள்ள முருகா மடத்தின் தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, உடல்நலக்குறைவு காரணமாக சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட உடனேயே மடாதிபதி, போக்சோ மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதாக சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறைக்கு அனுப்பப்பட்ட உடனேயே சிவமூர்த்தி முருகா சரணருக்கு சில உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

முருகா மடத்தின் விடுதியில் தங்கியிருந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பள்ளி மாணவிகளை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதிக்கு எதிரான விசாரணை "பக்கச்சார்பற்ற, சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறவில்லை" என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு வழக்கறிஞர்கள் குழு நேற்று கடிதம் எழுதியுள்ளது.

x