நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்: அதிர்ச்சியில் உறைந்த விளாத்திகுளம்


பொன்னுசாமி, ராஜாமணி

விளாத்திகுளம் அருகே நேற்று நள்ளிரவில் ஒரே தெருவில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த வயதான ஆண் மற்றும் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே காடல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்டது பூதலாபுரம் கிராமம். இங்கு வசித்துவந்தவர் பிச்சையா மனைவி ராஜாமணி வயது (68), இவரது மகன் கம்பெனி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் நேற்று இரவு ராஜாமணி வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை ராஜாமணி உடலில் வெட்டுக் காயங்களுடன் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து சாலையில் மயங்கி விழுந்தார். அங்கேயே அவர் உயிரிழந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீஸார் ராஜாமணியின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில் அதே தெருவில் உள்ள இன்னொரு வீட்டிலும் தனியாக இருந்த முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதன் பின்னர் தெரியவந்தது. பொன்னுச்சாமி (50), என்பவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த விவரம் தெரிந்ததும் போலீஸார் அவரது உடலையும் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீஸார் இருவரின் கொலைகளுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இருவரின் கொலைக்கும் தொடர்பு உள்ளதா, இருவரையும் கொலை செய்தவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு கும்பல்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரே தெருவில் வசித்துவந்த இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது விளாத்திகுளம் மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

x